Friday, August 16, 2013

கடற்கரை மணல் கொள்ளை - வி.வி மினரல்ஸ் நிறுவனம் - VV Minerals

Inline images 1 
கடற்கரை மணல் கொள்ளை :

அணுசக்தி துறையில் பயன்படுத்தப்படும் கார்னெட் மணலை அள்ளி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி.
கடற்கரை மணல் கொள்ளையர்களால் தூக்கியடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார்

‪‎நேற்று‬:
இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் மணல் அள்ளக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை

சென்ற‬ மாதம்:இயற்க்கை வளங்கள் மக்களின் பொது சொத்து -தமிழக முதல்வர்



‪‎விலை‬ மதிப்பில்லாத கார்னெட் மணல் கொள்ளையை தடுக்க ஆய்வுக்கு சென்ற ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்த அரசு ஆற்று மணல் கொள்ளையை தடுக்க வெளிவந்த பசுமை தீர்பாயத்தின் தீர்ப்பை எவ்வாறு செயல்படுத்தும்? அதிகார வர்க்கத்தின் துணையோடு இயற்க்கை வளங்கள் கொள்ளை அடிக்கபடுவதும் இயற்க்கை அன்னையின் அணிகலன்களை கொள்ளை போவதை தடுக்க வேண்டிய அரசு இதற்கு துணை போகலமா?

ஜிர்கானியம் தேரியம் கார்னெட் முலப்பொருட்களை அணுசக்தி துறையும் தயாரிக்கிறது ஆனால் அணுசக்தி துறைக்கே இந்த முலப்பொருட்களை தயாரிப்பதில் மிகபெரிய போட்டியளாரக மத்திய மாநில அரசுகளின் ஆசியோடு வி.வி மினரல்ஸ் நிறுவனம் வளர்ந்து இயற்க்கை வளங்களை கொள்ளையடித்து வருகிறது.

=====

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தென்மாவட்டங்களில் இருந்து ஜெர்மனிக்கு பனைமர நாரினால் கட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்தக் கயிறுகளில் ஒட்டிக் கொண்டிருந்த கடற்கரை மணலை ஆராய்ந்த ஜெர்மானியர்கள் அம்மணலில் இல்யூம்னைட், ரூடைல், கார்னெட் போன்ற கதிரியக்க தன்மை கொண்ட தாது உப்புகள் ஒளிர்வதைக் கண்டறிந்தனர். உலக சந்தையில் பல கோடி ரூபாய் பெறும் இம்மணல் இன்றளவில் மோசடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள் எப்படி இரும்பு தாது மணலை பினாமிகள் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு பொய் கணக்கு காட்டி ஏற்றுமதி செய்தார்களோ அதுபோல கடற்கரை மணலை கொள்ளையடிக்கிறார்கள்.

கோடி, கோடியாக சம்பாதித்த கடற்கரை மணல் கொள்ளையில் தூத்துக்குடி மாவட்டத்தின் கீழவைப்பார், பெரியசாமிபுரம், குஞ்செயபுரம், முத்தையாபுரம், வேம்பார் ஆகிய கடற்கரை கிராமங்களில் வனத்துறையின் சார்பில் புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் தாக்குதல்களை குறைப்பதற்காக நடப்பட்டு இருந்த சவுக்கு மரங்களும், மாங்குரோவ் காடுகளும் சேர்த்து சூறையாடப்பட்டு உள்ளது.
பேரிடர் தடுப்பு என்ற பெயரில் வனத்துறை மூலம் பல கோடி ரூபாய் செலவில் இப்பகுதியில் சவுக்கு மற்றும் மாங்க்ரோவ் காடுகள் நட்டுள்ளனர். அவை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகின்றது.

கடற்கரையில் இருந்து டிராக்டர் மூலம் அள்ளப்பட்டு வரும் மணல், நள்ளிரவில் குஞ்செயபுரம் மற்றும் முத்தையாபுரம் ஆகிய கிராமங்களுக்கு நடுவில் உள்ள சுடுகாட்டில் யார்டு அமைக்கப்பட்டு அதில் இருந்து மணல் லாரிகள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகின்றது.
அரிய கனிம வளங்கள் நிறைந்த மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மணல் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருகின்றது.
இதனால் கடல்வாழ் உயிரினங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது. ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972) படி பட்டியல் ஒன்றில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும். கடலில் வாழும் உயிரினங்களில் முழுக்க முழுக்க கடலை மட்டுமே சார்ந்து வாழாமல், நிலத்தையும் சார்ந்து வாழும் உயிரினம் ஆமை. ஆமைகள், இனப்பெருக்கத்திற்கு நிலத்தையும், உணவுக்கு கடலையும் பயன்படுத்துகின்றன.

வேம்பார், வைப்பார் பகுதியில் வாழும் அரியவகை ஆமைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மன்னார் வளைகுடாவில் கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரையிலான பகுதியில் குறிப்பாக மணப்பாடு, பெரியதாழைகடற்கரையிலும், புன்னக்காயல் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதியிலும், கீழவைப்பார் முதல் வேம்பார் வரையிலும், மூக்கையூர், சேதுக்கரை பகுதியிலும் ஆமைகள் முட்டையிட்டு வந்தது.
மணல் அள்ளப்பட்டு வருவதால் ஆமைகள் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு வருகிறது. அதோடு ஆமைகள் இனம் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மணல் எடுக்கப்படுகின்ற கடற்கரைப் பகுதி மீனவர்களின் வாழ்வாதார இடங்களாகும். படகுகளை நிறுத்துவது, வலைகளையும் மீன்களையும் உலர்ததுவது, அருகாமை கிராமங்களுக்குச் சென்றுவருவது போன்ற வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் இம்மணல் பரப்பை நம்பியே உள்ளன.

கடற்கரைச் சுற்றுச்சூழல் மாறுதல்களை தாங்கக் கூடியதல்ல. அதில் செய்யப்படுகின்ற சிறு மாறுதலும் மிகப்பெரும்எதிர் விளைவு ஏற்படுத்தும். கடலின் நீர் அழுத்தத்தால் உப்பு நீர் உட்புகாமல் கடற்கரை மணல்தான் தடுக்கிறது. அதுமட்டுமின்றி கடற்கரை மணலில் சேமிக்கப்படும் மழைநீர் நன்னீர் அரணாக மாறி உப்பு நீர் உள் நுழைவதைத் தடுக்கிறது.

கடலரிப்பும், கரை வளருவதும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து வந்துள்ளன. இதை ஆபத்து நிலைக்கு வளரவிடாமல் சூழியல் சமநிலை அமைப்புகளான மணல் குன்றுகள், உயிர் அரண் காப்புக் காடுகள் மற்றும் கரையோரத்தில் அமைந்த தாவரங்கள் பாதுகாத்துள்ளன.

இதற்கு மாறாக, கடற்கரையில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையால் கடலரிப்பு அதிகமாகின்றது. கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படுகின்றது. மணல் கொள்ளையால் கடல் நீரோட்டமே மாறுபடுகின்றது.

தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியே மன்னார் வளைகுடா எனப்படுகிறது. இப் பகுதி ராமேசுவரத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரையுள்ள இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கி, சுமார் 140 கி.மீ. தூரம் பரந்து காணப்படுகிறது.

மன்னார் வளைகுடா 10,500 சதுர கி.மீட்டர் பரப்பை கடல் பகுதியை மத்திய அரசு கடந்த 1986-ம் ஆண்டு மன்னார் வளைகுடா உயிர்க் கோளக்காப்பகமாக அறிவித்தது. 1989-ல் யுனெஸ்கோ நிறுவனம் பரிந்துரையின்படி, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் வளமான பகுதியாக இருப்பதால், இக் கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளும் அதனைச் சுற்றியுள்ள பவளப் பாறைகளையும் உள்ளடக்கிய 560 சதுர கி.மீ பரப்பளவை தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும்.

மன்னார் வளைகுடா தேசிய கடல்வளப் பூங்காவைப் பாதுகாக்க ரூ.140 கோடி செலவு செய்யப்பட்டு வருகின்றது.

கடலில் இருந்து 450மீட்டர் தூரம் மட்டுமே உள்ள குஞ்செயபுரம் கடற்கரையில் கருப்புமணல்அள்ளுகிறார்கள். வேம்பார் முதல் பெரியசாமிபுரம் வரை கடற்கரை ஓரம் பல ஆயிரக்கணக்கான பனைமரங்கள்உள்ளன.150க்கும் மேல் பனைத்தொழிலாளர்கள் உள்ளார்கள். கடல் மண் அள்ளுவதால் அனைத்து பனைமரங்களும்அழிந்துவிடும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த கிராமம் இயற்கை சீற்றத்தால் விரைவில் அழிய வாய்ப்பு உள்ளது.

வி.வி.மினரல்ஸ்



கீரைக்காரன்தட்டையைச் சேர்ந்த வி.வி.மினரல்ஸின் உரிமையாளர் வைகுண்டராஜன் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையில் அனுமதியில்லாமல் மணலை அள்ளி அதிலிருந்து அணு சக்திக்கான தாதுவைப் பிரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார் எனவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரையில் அரசின் அனுமதியில்லாமல் தாது மணலை எடுத்து பிரித்து விற்றதாகவும் மாநில கனிம வளத்துறை துணை இயக்குநர் குமரி மாவட்ட மத்திய குற்றப் பிரிவு போலீஸில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வி.வி.குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் அதிரடி ரெய்டுகளும் நடத்தப்பட்டன. அப்போது அணு சக்தி சட்டத்தின் கீழ் வைகுண்டராஜன், அவரது சகோதரர்கள் ஜெகதீசன் மற்றும் சந்திரேசன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிகார பலமும், அரசியல் பலமும் இருந்தாலும் அந்நேரத்தில் சில காலம் வைகுண்டராஜன் தனது சகோதரர்களுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். அது போன்ற நிலைமை தற்போது வந்து விடக் கூடாது என்று வைகுண்டராஜன் தரப்பினர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். 

வைகுண்டராஜன் மீதான நடவடிக்கைகளின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம். சென்னை வேளச்சேரியை சேர்ந்த தயாதேவதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இவர் கனிமத் தொழில் செய்யக்கூடிய நபர். அவரது மனுவில், "தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் மணலில் இலிமினேட், ரூட்டைல், ஜிர்கான், மோனோசைட் தாதுக்கள் உள்ளன. மணல் தாதுக்களை பிரிக்கும் தொழிலை, 1998ம் ஆண்டு வரை மணவாளக்குறிச்சியில் உள்ள மத்திய அரசின் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இத்தொழிலில் 2007ல் தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் கனிமத்தொழிலில் வைகுண்டராஜன் மற்றும் அவரது ஆட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அவர் 55 கடற்கரை மணல் குவாரி உரிமங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இத்தொழிலுக்கு மற்றவர்களுக்கு அனுமதி அரசு வழங்குவதில்லை. எனக்கு படுக்கபத்து கிராமத்தில் குவாரி நடத்த 1994ல் உரிமம் வழங்கப்பட்டது. ஆனால், என்னை தொழில் தொடங்க வைகுண்டராஜன் ஆட்கள் விடவில்லை.
வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ், அவரது ஆட்களான தங்கராஜின் பீச் மினரல்ஸ் சான்ட் கம்பெனி, ரமேஷின் டிரான்ஸ்வேல்டு கார்னெட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் மணல் தாதுக்களை கணக்குகாட்டாமல், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. டிரான்ஸ்வேல்டு நிறுவனம் 2002 & 2005 ஆண்டுகளில் அரசுக்கு ராயல்டி செலுத்தாமல் ரூ.2 கோடியே 58 லட்சத்து 62 ஆயிரத்து 476 மதிப்பிற்கும், பீச் மினரல்ஸ் நிறுவனம் 2001 & 2005 ஆண்டுகளில் கணக்குகாட்டாமல் ரூ.21 கோடியே 87 லட்சத்து 82 ஆயிரத்து 787 மதிப்பிற்கும் மணல் தாது ஏற்றுமதி செய்துள்ளது. இது தொடர்பாக வைகுண்டராஜன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளாத்திக்குளம் வட்டத்தில் 23 ஏக்கரில் மட்டும் கார்னெட் மணலை தோண்டி எடுப்பதற்கான உரிமம் தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி. மினரல்ஸ், அவரது சகோதரர் சுகுமாறனுக்கு சொந்தமான பீச் மினரல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் துணையுடன் அப்பகுதியில் உள்ள 200க்கும் அதிகமான ஏக்கரில் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து இந்த இரு நிறுவனங்களும் கார்னெட் எனப்படும் தாது மணலை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.

இதுதொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவை அனுப்பி சட்டவிரோத மணல் குவாரிகளில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஆணையிட்டுள்ளார். அதன்படி அந்தக் குழுவினர் ஆய்வை முடித்து திரும்புவதற்குள்ளாகவே ஆட்சியர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

=====

இவற்றை எல்லாம் பார்க்கும்போது நீதியரசர் சதாசிவம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கவனிக்கப்படவேண்டியது அவசியமாகிறது 

கோதாவரி-கிருஷ்ணா ஆற்றுப் படுகையில், அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்த ரிலையன்ஸ் அம்பானி சகோதரர்கள், அந்நிலத்திலிருந்து இயற்கை எரிவாயு எடுத்தனர். இதில் தனக்கும் ஒரு பங்கு வேண்டுமென உரிமை கோரியது இந்திய அரசு. கொடுக்க மறுத்தார்கள் அம்பானிகள். வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.

""நிலம், நீர், காற்று... இவை மக்களின் சொத்து. ஆற்றுப்படுகையில் கிடைக்கும் இந்த இயற்கை எரிவாயு மக்களுக்கே சொந்தம். இது தனக்கு மட்டுமே சொந்தமென எந்தத் தனி மனிதனும் உரிமை கொண்டாட முடியாது. இதில் அரசுக்கும் பங்குண்டு, உரிமையுண்டு!'' - நீதியரசர் சதாசிவம்

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts