Tuesday, August 20, 2013

அழுத்தமான நம்பிக்கை!

சட்டமன்றத்தில் திமுக முதற்பெரும் எதிர்க்கட்சியாய் நுழைந்த நேரம்…

நாவலர் நெடுஞ்செழியன்தான் எதிர்க் கட்சித் தலைவர். இரவு முழுவதும் பல்வேறு குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு சென்றிருந்தார். பொருளாதாரத்தில் ஆடம்ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை அனைத்து மேதைகளும் கூறிய பொன்மொழி களை அழகாக நாவலர் எடுத் துக் கூறிக்கொண்டிருந்தார்.

காமராஜர் அவரைப் பேசவே விடவில்லை. “அவர்கள் சொன்னது இருக்கட்டும்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததாலும், காமராஜரின் இந்தத் ‘தொடர் தாக்குதலாலும்’ நாவலர் நெடுஞ்செழியன் திடீ ரென சட்டமன்றத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.

அப்போது எங்களுக்கெல்லாம் கட்டுமீறிக் கண்சிவந்த கோபம். ஆனால், இப்போது நினைத்துப் பார்க்கிறபோது, காமராஜரின் அன்றைய கேள்விகளில் ‘நியாய ரேகை’ ஒளிவிடுகிறது.

அடுத்தது கலைஞர் பேச்சு!

அவரும் ‘இசைக்கருவிகள் முழங்கினால் நெற்பயிர் வளரும்’ என்பதற்கு அடுக்கடுக்கான காரணங்களை – ஆதாரங்களை எடுத்துக் கூறிக்கொண்டிருந் தார்.

காமராஜர் கேட்டார்… “சட்டசபையிலே இதை எல்லாமா பேசறது?”

“சட்டசபையில் என்ன பேசுவது என்று நீங்கள் எழுதிக்கொடுங்கள்… நாங்கள் பேசுகிறோம்!” என்று கூறிவிட்டுக் கலைஞர் அமர்ந்தார். திமுக- வின் சட்டமன்றப் பயிற்சிக்கு, காமராஜர் கைப்பிரம்பு தூக்கிய ஒரு ஆசிரியரே!

காமராஜர் பட்டப்படிப்பு படிக்காதவராக இருக்கலாம். ஆனால், அவரது பட்டறிவு, வாளின் கூர்மை போன்றது. அதனால்தான் அந்தப் படிக்காத மேதையைச் சுற்றி படித்த மேதைகளின் கூட்டம் மொய்த் துக் கிடந்தது.
பொதுக்கூட்டத்தில் அவருக்கு முன் பேசுபவர்கள் யாராவது வரம்பு மீறி எதிர்க் கட்சித் தலைவர்களைத் தாக் கினால், தடுத்து நிறுத்திவிடுவார். கவிஞர் கண்ணதாசனும் இந்தக் ‘கில்லட்டின் வாளில்’ பலமுறை மாட்டிக்கொள்வார். “அந்தக் கவிராயரை உட்காரச் சொல்லய்யா” என்று சத்தம் போட்டுச் சொல்வார் காமராஜர்.

அந்தக் காலத்தில் அவரைத் தாக்கி எதிர்க்கட்சிகள் பேசியது போல் வேறு எந்தக் காலத்தி லும் இல்லை எனலாம். ஆனால், “ஆளுங்கட்சிக்கு அரசாங்க வேலை! எதிர்க்கட்சிக்கு என்ன வேலை? நம்மைப் பத்திப் பேசற பிழைப்புதானே? அவன் பிழைப்பிலே ஏன் மண்ணைப் போடறே?” என்று வெளிப்படையாகவே கேட்பார்.
நையாண்டி படத்துக்காக (கார்ட்டூன்) கைது செய்கிற இந்தக் காலத்தையும் பார்க்கிறோம். அவரது காலத்தில் அவரைக் கன்னாபின்னா என்று நையாண்டி ஓவியம் வரைந்தபோது காமராஜர் கூறினார்… “பொம்மையைக் கண்டு ஏன் பயப்படறே? உண்மையைக் கண்டு பயப்படு! போ… போ..!”

‘ஹைதராபாத் வங்கியில் ஒன்றரைக் கோடி ரூபாய் போட்டிருக்கிறார் காமராஜர்’ என்ற வதந்தி பரவி – மேடைப் பேச்சாகி – அறைகூவல் வடிவில் வந்தது.

“எவனோ எதையோ சொல்றான்… விடு! எனக்கு யானைக்கால் வியாதின்னு யாராவது சொன்னா, ஒவ்வொருத்தர் கிட்டேயும் நான் போய் என் காலைக் காட்டிக்கிட்டா இருக்க முடியும்?” என்று கேட்டார் காமராஜர்.

அடேயப்பா! தன்னைப் பற்றியும் தனது நேர்மையைப் பற்றியும் எத்தனை அழுத்தமான நம்பிக்கை! அந்த நம்பிக்கை குறைகிற தலைவர்கள்தாம் தன்னைப் பற்றித் திறனாய்வு செய்கிறவர் தலையைத் திருகி சிதறு தேங்காய்போல வீசிட நினைக்கிறார்கள்.

-அடியார்

No comments:

Post a Comment

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts